"ரத்தத்தில் என்ன சாதி உள்ளது?" - கொலை செய்யப்பட்ட பிரவீனின் தந்தை வேதனை!
காதல் திருமணம் செய்த இளைஞர் பிரவீன் கொலை செய்யப்பட்ட நிலையில், ரத்தத்தில் என்ன சாதி உள்ளது என அவரது தந்தை வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்லடியன்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஷர்மியின் வீட்டார் இவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே நேற்று பிரவீனை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு படுகொலை செய்தனர்.
இதையும் படியுங்கள் : மத்திய பாஜக அரசின் தடையை தாண்டி தமிழ்நாடு சாதித்து வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தங்கையை பெற்றோர்கள் விருப்பம் இல்லாமால் அழைத்து சென்று திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ், பிரவீனை கொலை செய்து பழிதீர்த்துக் கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ், ஸ்டீபன், ஸ்ரீ, விஷ்ணு, ஜோதி லிங்கம் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குடன், 325 (SC/ST ACT) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக பிரவீன் மற்றும் ஷர்மியின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கொலை செய்யப்பட்ட பிரவீனின் தந்தை, “சாதி வெறியால் திருமணமான நான்கு மாதத்தில் எனது மகனை கொலை செய்துவிட்டனர். வீட்டில் இருந்து பொருட்களை வாங்க வெளியே சென்ற எனது மகனை அவருடைய மனைவியின் சகோதர் உட்பட சிலர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்ததில் என்ன சாதி உள்ளது?” என்று வேதனை தெரிவித்துள்ளார்.