For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அணியில் மற்ற 10 வீரர்களும் என்ன செய்கிறார்கள்?” - தோனி குறித்த விமர்சனங்களுக்கு ரெய்னா அதிரடி பதில்!

ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு நிர்வாகமே காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.
01:47 PM Apr 27, 2025 IST | Web Editor
“அணியில் மற்ற 10 வீரர்களும் என்ன செய்கிறார்கள் ”   தோனி குறித்த விமர்சனங்களுக்கு ரெய்னா அதிரடி பதில்
Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்து, சீசனின் ஏழாவது தோல்வியை சென்னை அணி சந்தித்தது. இது, ஐபிஎல் 2025ல் சேப்பாக்கத்தில் சென்னை அணி சந்தித்த நான்காவது தோல்வியாகும்.

Advertisement

இந்த சீசனில் மோசமான தோல்வியை சென்னை அணி சந்தித்துள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தோல்விக்கு பலர் தோனியை குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஏலத்தின் போது தோனியும், சென்னை அணி நிர்வாகமும் வீரர்களை சரியாக தேர்வு செய்யாததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் ஒவ்வொரு வீரர் தேர்வின் பின்னும், ஏல முடிவிற்கும் மூளையாக தோனி செயல்படுகிறார் என்ற நீண்ட நாள் பேச்சுக்கு இந்திய மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர்,

“எம்.எஸ். தோனிதான் வீரர்களை தேர்வு செய்வதில் இறுதி முடிவை எடுக்கிறார் என்று எப்போதும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு வீரரைத் தேர்வு செய்வதா, இல்லையா என்பது குறித்து எம்.எஸ்.க்கு அழைப்பு வரலாம்,  ஆனால் அவர் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை.

காஷி சார் கிட்டத்தட்ட 30 முதல் 40 ஆண்டுகளாக நிர்வாகத்தைக் கையாண்டு வருகிறார் என்று நினைக்கிறேன். மேலும் ரூபா அனைத்து கிரிக்கெட் நிர்வாகத்தையும் நிர்வகித்து வருகிறார். ஆனால் இந்த முறை வீரர்கள் சரியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அணி நிர்வாகம்தான் ஏலத்தை கையாள்கிறது. நீங்கள் கற்பனை செய்யலாம், ஆனால் தோனி ஏலத்தை நடத்த முடியாது. அவர் விரும்பும் நான்கு அல்லது ஐந்து வீரர்களின் பெயர்களைக் கூறலாம், அவர்களில் சிலர் தக்கவைக்கப்படுவார்கள். ஒரு புதிய வீரர் கடினமாக உழைத்தாலும், 43 வயதான கேப்டனாக இருக்கும் எம்.எஸ். தோனியைப் பாருங்கள். அவர் இன்னும் தனது உழைப்பை கொடுத்து வருகிறார்.

அவர் தனது பிராண்டிற்காக, தனது பெயருக்காக, தனது ரசிகர்களுக்காக மட்டுமே விளையாடுகிறார்; இன்னும் முயற்சி செய்கிறார். 43 வயதில், அவர் விக்கெட் கீப்பிங், கேப்டனாக, முழு அணியையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். ஆனால், அணியில் உள்ள மற்ற 10 வீரர்களும் என்ன செய்கிறார்கள்?. ரூ. 18, 17, 12 கோடிகள் சம்பளம் வாங்கும் வீரர்கள் கேப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் இதற்கு முன்பு தோல்வியை சந்திக்காத அணிகளிடம் நாம் தோற்றுள்ளோம்.

இந்த வீரரை நம்பலாமா? இவர் மேட்ச் வின்னரா? என்று அடையாளம் காண வேண்டும். சில வீரர்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். அவர்கள் இருந்தும் முடிவு என்ன? அணி தோல்வியை சந்திக்கிறது. ஒவ்வொரு முறையும் அதே தவறுகள் நடக்கின்றன” என்று கூறினார்.

Tags :
Advertisement