16-ஆவது நிதி ஆணைய குழு கூட்டத்தில் தமிழக அரசு அளித்த முக்கிய பரிந்துரைகள் என்னென்ன? முழு விவரம் இதோ!
16-ஆவது நிதி ஆணைய குழு கூட்டத்தில் தமிழக அரசு முக்கிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சென்னையில் இன்று 16வது நிதி ஆணைய குழு கூட்டம் நடைபெற்றது. இதில், நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா, நிதிக்குழு உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, அன்னி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது நிதிக்குழுவுக்கு தமிழக அரசு முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27ம் ஆண்டு காலகட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிதி ஆணைய குழுவுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை காலத்தில் செயல்படுத்த நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீத என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டும். நகர்ப்புற வெள்ளம், வறட்சி நிவாரணம், கடலோர மேலாண்மை மேற்கொள்ள குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மானியம், குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கடற்கரையின் நீளம், நகரமயமாக்கல் போன்ற வரையறை உள்ளிட்ட புதிய குறியீடுகளுடன் பேரிடர் குறியீடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50:50 என்ற விகிதத்தின் அடிப்படையில் மானியம் ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான பகிர்வானது மாநிலங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.