விடைபெறும் 2023 - இந்தியாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் என்னென்ன..?
இந்திய அளவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்தியாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.உத்தரகாண்ட் சுரங்க விபத்து
நவம்பர் 12 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்க வழிச் சாலை அமைக்கும் பணியின் போது ஒருபகுதி சரிந்து விழுந்து 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. சர்வதேச சுரங்க நிபுணர்களின் உதவி நாடப்பட்டது. 17 நாட்களுக்கு பின்னர் நவம்பர் 28 ஆம் தேதி அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஜி-20 மாநாடு
இந்தியா தலைமை தாங்கிய ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் செம்டம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பொருளாதாரம், நிதி சார்ந்த விஷயங்கள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த கூட்டமைப்பில் புதிய உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.சந்திரயான் 3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை ஜூலை 14ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கியது. தொடர்ந்து லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் நிலவில் தனது ஆய்வினை தொடங்கியது. இதன்மூலம் நிலவில் ஆக்ஸிஜன், கந்தகம், மாங்கனீசு, இரும்பு உள்ளிட்ட தனிமங்கள் இருப்பது தெரியவந்தது. 14 நாட்கள் ஆய்வுக்கு பிறகு நிலவில் இருள் சூழ்ந்ததால் லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 14 நாட்களுக்குப் பிறகு சூரிய ஒளி வந்த நிலையில், ரோவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தெரிவித்தது.ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே ஜூன் 2-ம் தேதி சரக்கு ரயில், கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளாகின. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான பயணிகள் படுகாயமடைந்தனர். மனித தவறால் தான் ரயில் விபத்து நேர்ந்ததாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தி ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை அளித்தார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், பணியில் அலட்சியமாக இருந்த ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் மே 3-ம் தேதி மெய்தெய் மற்றும் குகி இன மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டும், மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் 17 நாட்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் மணிப்பூர் விவகாரமே பேசுபொருளாக இருந்தது.புதிய நாடாளுமன்றம்
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா மே 28-ம் தேதி நடைபெற்றது. பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட செங்கோல் நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர், புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும் எனக் கூறினார். இந்த விழாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை அழைக்காதது பேசுபொருளானது.2000 ரூபாய் நோட்டுகள்
செப்டம்பர் 30-ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பணப்புழக்கத்தை சமாளிக்கும் வகையில், புதிதாக அறிமுகமான 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு புழக்கத்தில் இருந்து குறைந்தது. இதையெடுத்து செப்டம்பர் 30-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அவற்றை திரும்பப் பெறுவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. தொடர்ந்து ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. நவம்பர் 30-ம் தேதி வரை 97 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.அதானி குழும விவகாரம்
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஜனவரி 24-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. உலகப் பணக்கார்கள் வரிசையில் 3-ம் இடத்தில் இருந்த கெளதம் அதானி 25-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேநேரம் ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் முன்னேறி வந்த அதானி, தற்போது 72.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பணக்காரர்கள் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளார்.இமாச்சல் வெள்ளம்
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுமார் 367-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 700-க்கு மேற்பட்ட சாலைகள் மற்றும் 2,800-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.மக்களவை புகைக்குப்பி வீச்சு சம்பவம்
டிசம்பர் 13-ம் தேதி மக்களவையில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து வண்ணப் புகை குப்பிகளை வீசினர். நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மீண்டும் தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவைக்குள் குதித்த 2 பேரிடமும் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் ஒப்புதல் கடிதம் இருந்ததும் தெரியவந்தது.மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, செம்டம்பர் 21-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதாவிற்கு ஆதரவாக 453 பேரும், 2 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்து 2029-ல் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.