For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செல்ல தங்கத்துக்கு என்னாச்சு...?

05:45 PM Oct 19, 2024 IST | Web Editor
செல்ல தங்கத்துக்கு என்னாச்சு
Advertisement

10 மாதங்களில் 10 ஆயிரத்துக்கு மேல் விலை உயர்வு. வரி குறைந்தும் விலை குறையலயே…

Advertisement

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏன் இந்த விலை உயர்வு? காரணம் என்ன ? இப்போது பார்க்கலாம்…

உலக நாடுகளில் முதலீட்டில் ஒன்றாக பார்க்கப்படும் தங்கம். இந்தியாவில் முதலீட்டுடன், சொத்து மற்றும் சமூக அந்தஸ்தாகவும் பார்க்கும் நிலை இருக்கிறது. இதனால், தங்க நகைகள் மீதான மோகம் அதன் விலையைப் போலவே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், ஆண்டிற்கு 800 - 1, 000டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகம் இறக்குமதியாகிறது. சட்டப்படியான இறக்குமதிக்கு மாறாக சட்டவிரோத தங்க கடத்தலும் ஒருபக்கம் அரசுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. தங்கம் விலை அதிகரிக்க இறக்குமதியின் போது விதிக்கப்படும் சுங்க வரியும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது.

திடீரென விலை குறைந்த தங்கம்

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்த சில மணி நேரத்தில், ஒரு பவுன் (சவரன்) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்து 80 குறைந்து. இதனால், ரூ. 54 ஆயிரத்து 800க்கு விற்ற ஒரு பவுன் தங்கம் ரூ. 52,400 ரூபாய்க்கு குறைந்தது. இதே போல் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ. 3,100 குறைந்து ரூ. 92 ஆயிரத்து 500மாக குறைந்தது. சில நாட்களுக்கு மெல்ல குறைந்த தங்கம், வெள்ளியின் விலை, மீண்டும் உயரத் தொடங்கியது. இன்றைக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

புதிய உச்சம் தொட்ட தங்கம்

தங்க ஆபரணங்களை வாங்குவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும் பலரின் விருப்பமாக இருந்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்க விற்பனையைப் போலவே விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 56, 200 விற்ற நிலையில், தற்போது ஒரு பவுன் தங்க நகை ரூ. 58, 240க்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு பவுனுக்கு ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி, கடந்த 16ம் தேதி ஒரு கிராமிற்கு ரூ. 45 என ஒரு பவுனுக்கு 360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ. 57, 120க்கு விற்பனையானது. அடுத்த நாள் பவுனுக்கு ரூ. 160 உயர்ந்தது. கடந்த 18ம் தேதி ஒரு பவுனுக்கு ரூ. 640 உயர்ந்தது. இந்நிலையில், 19ம் தேதி பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ. 58, 240 ஆகியுள்ளது தங்க நகை வியாபாரிகள்.

ஜனவரி வரை உயரும்

இந்த விலை உயர்வு ஜனவரி மாதம் வரை தொடரும் உத்தேசமாக ஒரு பவுன் ரூ. 65 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை, அறுவடை மற்றும் விழாக் காலங்களில் சில்லறை விற்பனை அதிகரிப்பதும் இயல்பு அந்த வகையில் தீபாவளி, அதைத் தொடர்ந்து பொங்கல், திருமணங்களுக்கு தங்க நகை அதிகம் வாங்குவார்கள். இதனால், விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உயர்ந்து கொண்டே தான் இருக்குமா? குறைய வாய்ப்பில்லையா? சுங்க வரி குறைந்தும் தங்க விலை ஏன் குறையவில்லை என்கிற கேள்வியும் எழும். சில்லறை விற்பனையில் விலை குறையவும் வாய்ப்புள்ளது. ஆனால், அது விலை உயர்வோடு ஒப்பிடும் போது, விலை குறையும் விகிதம் என்பது பெயரளவில்தான் இருக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் சிற்பி

60, 000 கடந்தாலும் ஆச்சரியமில்லை

இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்கள் மற்றும் சர்வதேச நிலவரங்களும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. கடந்த ஓராண்டிற்குள் மட்டும் 38 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ. 47, 820க்கு விற்றது. பத்து மாதங்களுக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ. 10 ஆயிரத்து 420க்கு (அக்டோபர் 19ம் தேதி நிலவரப்படி) உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ. 60 ஆயிரத்தை கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

மேலும், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளது. சீனாவின் மத்திய வங்கி தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகிறது. இவற்றாலும் ரஷ்யா, இஸ்ரேலில் தொடரும் போர்ச் சூழலாலும் தங்கத்தில் முதலீடு செய்வதில் உலகளாவிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், உலக சந்தையில் தங்கத்தின் ஒருபக்கம் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. விலை உயர்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் உயரும். ஆகையால், கட்டாய முதலீடு என்கிற அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை என்கிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள். தங்கத்தின் அளவிற்கு விலை உயரவில்லை என்கிற ஆறுதலோடு வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்தது. ஆனால், வெள்ளியும் ஒரு கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 105க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.2,000 உயர்ந்து ரூ.1.05 லட்சமாகியுள்ளது. ஏழை, எளிய மக்கள் எதிர்காலத்தில் வெள்ளி வாங்குவதும் பெரும் கேள்வி ஆகி விடுமா? தாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை குறையுமா? காத்திருப்போம்…

Tags :
Advertisement