லால் சலாம் | தொலைந்து போன பகுதி #OTT-ல் சேர்ப்பு - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு நடைபெற உள்ள நிலையில் தொலைந்துபோன பகுதியை சேர்த்துள்ளதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ”வை ராஜா வை” என்ற படத்தையும் இயக்கினார்.
இந்த படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படம் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் நடித்திருந்தார்.
மேலும் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
பல காரணங்களால் படத்தின் ஓடிடி வெளியீடு தாமதமாகி வந்தநிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வரும் செப்.20ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓடிடி வெளியீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது..
” லால் சலாம்' திரைப்படத்தின் Director's Cut விரைவில் ஓடிடியில் வெளியிடப்படும். தொலைந்துபோன சில காட்சிகளை மீட்டு இதில் சேர்த்துள்ளோம். அதனால் திரையரங்கில் வெளியான வெர்ஷனைவிட இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இதுதான் நான் எழுதிய கதைப்படி இருக்கவேண்டிய படமாகும்” என தெரிவித்துள்ளார்.