#WestBengal | எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து - பயணிகளின் நிலை என்ன?
ஹவுரா அருகே நல்பூரில் ஷாலிமார் - செகந்திராபாத் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்குவங்க மாநிலம் ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் - ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தரம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : #Brazil | சாவோ பவுலோ விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு… ஒருவர் பலி, 3 பேர் காயம்!
தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று பார்சல் பெட்டி என்றும் மற்ற மூன்றும் பயணிகள் பெட்டி என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.