NIA மற்றும் CRPF மீது மேற்குவங்க காவல்துறை வழக்குப்பதிவு!
விசாரணையின்போது, பெண்களிடம் அநாகரிக முறையில் நடந்துகொண்டதாக என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின் மேதினிபூர் அடுத்த பூபதி நகரில் ராஜ் மன்னா என்பவரின் வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த என்ஐஏ குழு மேற்கு வங்கம் பூபதி நகருக்கு சென்றுள்ளனர்.
விசாரணைக்கு பிறகு பாலை சரண் மைதி, மனோபிரதா ஜனா ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இருவரையும் கைது செய்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லும்போது, என்ஐஏ அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி , 2022 குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கிராமத்தினர் வீட்டுக்குள் என்ஐஏ விசாரணைக் குழு அதிகாலையில் சென்றுள்ளது. அப்போது இதற்கு எதிராக மட்டுமே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் யாரும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், அதிகாரிகள்தான் உள்ளூர் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்' என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே உள்ளூர் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கிழக்கு மிட்னாபூர் காவல்துறையினர் என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் அளித்துள்ள புகாரில், தன்னையும் தன் கணவரையும் அதிகாரிகள் தாக்கியதாகவும், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தன்னிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ள முற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 325, 34, 354, 354(பி), 427, 448, 509 ஆகியவற்றின் கீழ், பூபதிநகர் காவல்நிலையத்தில் என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.