வங்கதேச எல்லைக் காவல் படையின் தாக்குதலில் 18 BSF வீரர்கள் கொல்லப்பட்டனரா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘India Today’
மேற்கு வங்கத்தின் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லைப் பகுதிகளில் BSF மற்றும் வங்காளதேச எல்லைக் காவலர் (BGB) இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் எல்லையின் பாதுகாப்பற்ற பகுதிகளில் முட்கம்பி வேலி அமைப்பதை பிஜிபி தடுத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கார்டு வைரலானது.
இந்திய-வங்காளதேச எல்லையில் BSF மற்றும் BGB இடையே பெரும் மோதல் உள்ளது. BGB நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 BSF வீரர்கள் கொல்லப்பட்டனர். மறுபுறம், BSF தாக்குதலில் ஒரு BGB உறுப்பினர் மட்டுமே காயமடைந்தார் என அந்த நியூஸ் கார்டு வைரலானது. அந்த பதிவின் Descriptionல் "எல்லையில் மோதல்: வங்காளதேசத்தை சார்ந்த் ஒருவர் காயம்: இந்தியர்கள் 18 பேர் பலி" என எழுதப்பட்டிருந்தது.
இதேபோல "கடந்த சில நாட்களாக, வங்காளதேசம்-இந்திய எல்லையில் ஒரு ஆயுத மோதல் ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வங்கதேச எல்லைப் பகுதியில் பணியில் இருந்த பிஜிபி உறுப்பினர்களுக்கும், பிஎஸ்எஃப் உறுப்பினர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றுள்ளது. இந்த என்கவுன்டரில் ஒரு வங்கதேச BGB உறுப்பினர் பலத்த காயமடைந்தார், மேலும் 18 இந்திய BSF வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது” என்கிற தலைப்பிலும் செய்திகள் பரவின.
ஜனவரி 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் BSF துப்பாக்கிச் சூட்டில் இரண்டு வங்கதேச குடிமக்கள் காயமடைந்தது உண்மைதான் என்று இந்தியா டுடே ஃபேக்ட் செக் கண்டறிந்துள்ளது. இருப்பினும், BGB தாக்குதலில் 18 BSF வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
முதலில் வைரலான கூற்று சந்தேகத்திற்குரியது என கண்டறிந்தோம் ஏனெனில் சமீபத்தில் 18 BSF வீரர்கள் வங்கதேச எல்லைக் காவலர் அல்லது BGB யால் கொல்லப்பட்டால், அது தொடர்பான செய்திகள் இந்திய அல்லது வங்கதேச மற்றும் சர்வதேச ஊடகங்களில் கண்டிப்பாக வெளியிடப்படும். ஆனால் இது சம்பந்தமாக ஒரு முக்கிய தேடலில் இந்த கூற்றை உறுதிப்படுத்தும் நம்பகமான தகவல் அல்லது அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. BSF இன் அதிகாரப்பூர்வ X பக்கம் மற்றும் வலைத்தளத்தில் கூட இது தொடர்பான எந்த தகவலையும் கண்டுபிடிக்கவில்லை. இதிலிருந்து BGB துப்பாக்கிச் சூட்டில் 18 BSF வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளியான வைரல் செய்தி போலியானது என்று ஊகிக்க முடிகிறது.
மேலும் இதுதொடர்பாக முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடியபோது, ஜனவரி 11, 2025 அன்று வங்கதேச ஊடகமான டைம் டிவியின் இணையதளத்தில் ஒரு அறிக்கை கண்டறியப்பட்டது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, " ஷிவ்கஞ்ச் பகுதியில் உள்ள அஸ்மத்பூர் எல்லையில் உள்ள பாகிச்சாபாரா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படை BSF 8 முதல் 9 ரவுண்டுகள் சுட்டனர். இதில் வங்கதேச குடிமகன் ஒருவர் காயமடைந்தார். படுகாயமடைந்த நபர் ஷாஹிதுல் இஸ்லாம் என்றும் அவர் ஷாபாஸ்பூர் ஒன்றியம், பாகிச்சாபாரா கிராமத்தைச் சேர்ந்த அனாருல் இஸ்லாமின் மகன் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது ராஜ்ஷாஹி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே தகவல் மற்றொரு வங்கதேச ஊடகமான Prothom Alo அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல ஜனவரி 13, 2025 அன்று, ப்ரோதோம் அலோவின் மற்றொரு அறிக்கையில், BSF நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு வங்கதேச குடிமகன் காயமடைந்ததாக தகவல் உள்ளது. அதில், "லால்மோனிர் ஹாட்டின் பட்கிராம் எல்லையில் இந்திய எல்லைக் காவல் படை பிஎஸ்எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச குடிமகன் ஷாஹிதுல் இஸ்லாம் (42) காயமடைந்தார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை உபாசிலாவின் ஜகத்பர் யூனியனின் எல்லைக்கு அப்பால் உள்ள கூச் பெஹாரில் உள்ள மைனதாலி கிராமத்தில் நடந்தது. காயமடைந்த ஷாஹிதுல், ஜகத்பர் யூனியனின் காஷிர்தங்கா கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் ஜாவேத் அலி. இருப்பினும், BGB துப்பாக்கிச் சூட்டில் 18 BSF ஜவான்கள் கொல்லப்பட்டதாக எந்த அறிக்கையும் குறிப்பிடவில்லை.
மேலும் ஜனவரி 12 அன்று இந்திய ஊடகங்களில் ஒரு செய்தியைக் காண முடிந்தது. அவற்றில் இந்தியா- வங்கதேச எல்லையில் முட்கம்பி வேலியால் வைக்கப்பட்ட இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது குறித்து விவாதிக்க வங்காளதேச இடைக்கால அரசாங்கம் டாக்காவில் நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஆணையரை ஞாயிற்றுக்கிழமை வரவழைத்தது. அந்த அறிக்கையில் கூட, BGB துப்பாக்கிச் சூட்டில் 18 BSF வீரர்கள் இறந்தது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
முடிவு :
வங்கதேச எல்லைக் காவல் படையான BGB தாக்குதலில் 18 இந்திய BSF வீரர்கள் கொல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலானது. இதுகுறித்து நடத்தப்பட்ட உண்மை சரிபார்ப்பில் வைரலாகும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்பதை கண்டறிந்தோம்
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.