வார விடுமுறை – ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!
விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்று குற்றாலம். குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் கொட்டியது. இதனால் அருவிக்கரைகள் மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்தது. இந்த சேதங்களானது சீர் செய்யப்பட்டு தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சென்று புனித நீராடி விட்டு செல்வது வழக்கம். இதன் காரணமாகவே குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் கடைகள் வைத்துள்ள கடைகளில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.