களைகட்டிய தீபாவளி-நாடு முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை..!
தீபாவளிக்கு இந்தாண்டு நாடு முழுவதும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள், வானவெடிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி வெடிப்பது வழக்கம்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய தொழிலாகவும், பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாகவும் பட்டாசு தயாரிக்கும்
தொழில் உள்ளது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள், வானவெடிகள் வெடிக்காத ஊர்களே இல்லையென்று கூறலாம்.
திருவிழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகை கொண்டாட்டங்களில் பட்டாசுகள் தான் முதன்மையானதாக இடம்பெறும். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக, சிவகாசி பகுதியில் உள்ள 1200க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகளில் பலவகை பட்டாசுகள், நவீன ரக வெடிகள், வானவெடிகள் என சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டாசுகள், கடந்த ஓராண்டாக தயாரிக்கப்பட்டன.
நாடு முழுவதும் விற்பனை செய்வதற்காக, சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தியாவில் டெல்லி மாநிலம் தவிர்த்து, அனைத்து மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை மிக நன்றாக நடைபெற்றது. இந்த தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பட்டாசுகள் விற்பனை நடந்திருப்பதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 3000 கோடி பட்டாசு விற்பனை நடைபெற்றதாகவும், இந்த ஆண்டு 2000 கோடி பட்டாசு விற்பனை கூடுதலாக நடைபெற்றுள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.