#WeatherUpdate | இரவு 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (நவ.14,15) தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, சென்னையில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.