ஆர்ட்ஸ் காலேஜ் சேர்க்கை - ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் விண்ணபித்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “07.05.2025 அன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டது. இன்று (19.05.2025) மாலை 6 மணி நிலவரப்படி 1,61,324 மாணாக்கர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.
இதில் 46.691 மாணவர்களும், 75,959 மாணவிகளும். 48 மூன்றாம் பாலினத்தவரும் ஆக மொத்தம் 1.22.698 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 27.05.2025 வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 165 உதவி மையங்கள் (Help-Desk) மற்றும் மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டு சேவை மையங்கள் (Admission Facilitation Centre) நிறுவப்பட்டுள்ளன.
அந்தந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-24342911 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது dceofficehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், சென்னை மண்டலத்தில் உள்ள கீழ்க்கண்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேவைக்கேற்பவும், வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் தனித்துவமான பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.