#WeatherUpdate | நாளை உருவாகிறது டானா புயல்… எங்கு எப்போது கரையை கடக்கும்?
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (அக்.24) ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (அக்.21) காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்.23) புயலாக மாறும். இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, நாளை மறுநாள் (அக்.24) வடமேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. இந்த சூழலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்.22 முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது."
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.