வானிலை முன்னறிவிப்பு : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைமுதல் ஜன.23ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஜன.24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஜன.21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இன்று முதல் 22ஆம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிகளுக்கு 24ஆம் தேதி வரை எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.