"திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்" - ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது. பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி புகழஞ்சலி செலுத்தியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களிடையே உறுதிமொழியை வாசித்தார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என இபிஎஸ் உறுதிமொழியை வாசிக்க தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.