“பாஜக, பாமக, தவெகவுடன் சேரமாட்டோம்... நான் சராசரி அரசியல்வாதி அல்ல” - திருமாவளவன்!
புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், அங்கு அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்,
“ஒரே நேரத்தில் 2 அணிகளுடனும் பேசுகிற ராஜதந்திர சூழ்ச்சி நமக்கு இல்லை. பாஜகவிலும் சேரமாட்டோம், பாமகவுடனும் சேரமாட்டோம். அந்தக் கட்சிகளுடன் இடம்பெறுகிற கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பதவிதான் முக்கியம் என்றால் இப்படி எல்லாம் என்னால் பேச முடியுமா?.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கூட, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தபோது கூட நாம் இருக்கிற கூட்டணி தொடர வேண்டும், அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதன்மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜகவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதை எல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தவன் திருமாவளவன்.
விஜய் கூட சொன்னார், அண்ணன் திருமாவளவன் இன்று வரவில்லை. ஆனால் அவரது மனசு நம்முடன் இருக்கும் என்று பேசினார். நான் நினைத்திருந்தால் விஜய் உடன் கூட்டணி அமைக்க கதவு திறந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நான் அந்தக் கதவையும் மூடினேன். அதுதான் திருமாவளவன்.
பாஜக கூட்டணி கதவையும் மூடினேன். அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது, துணை முதலமைச்சர் பதவியையும் கோரலாம், கூடுதலாக 4 அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என ஆசைகாட்டிய பலர் உண்டு. நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உறுதிப்படுத்தி இருக்கிறேன். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்தி விட முடியாது.
நான் யூகம் செய்தது சரியாகி விட்டது. ஏன் அதிமுக பாஜகவில் போய் சிக்கியது. யோசித்துப் பாருங்கள். நம்மை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிறகு அதிமுக இதே முடிவை எடுக்க வாய்ப்பிருந்தது. அப்படி நடந்திருந்தால் இன்றைக்கு நடுத்தெருவில் நின்றிருப்போம். அரசியல் நிலைப்பாடுகளை நாம் எடுக்கும்போதும் அம்பேத்கரை நெஞ்சில் நிறுத்திக்கொண்டுதான் எடுக்கிறோம்" எனப் பேசியுள்ளார்.