For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பெண்களுக்கு எதிரான அரசாணையை கொண்டு வர மாட்டோம்” - அமைச்சர் அன்பில் மகேஸ்

07:51 PM Feb 04, 2024 IST | Web Editor
“பெண்களுக்கு எதிரான அரசாணையை கொண்டு வர மாட்டோம்”   அமைச்சர் அன்பில் மகேஸ்
Advertisement

பெண்களுக்கு எதிரான அரசாணையை நாங்கள் கொண்டு வர மாட்டோம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், அரசாணை 243-ஐ நிறைவேற்றி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டில், முதல் நன்றி அறிவிப்பு மாநாடாக இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கருணாநிதியுடன் எதாவது ஒரு மாநாட்டிலாவது பங்கேற்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. ஆனால், இங்கு காணொளி மூலம் அவர் நம்மிடம் பேசுவது போல ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்கள் கோரிக்கைகளில் அழுத்தம் இருந்தது. நியாயம் இருந்தது என்பதை அவர் அழகாக வலியுறுத்தியுள்ளார்.இங்கு அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் மாணவனாக நான் வந்துள்ளேன். 53,000 ஆசிரியர்களுக்கு விடுதலை தந்த கருணாநிதியின் இயக்கத்தை சார்ந்தவன் நான். சரியாக செய்வது தான் சமூக நீதி, இதை நீங்கள் உணர வேண்டும். பெண்களுக்கு எதிரான அரசாணையை நாங்கள் கொண்டு வர மாட்டோம். பொதுவான அரசாணை என்பது, குறிப்பிட்ட பெண்களுக்கு எதிரான அரசாணையாக மட்டும் எப்படி போகும் என்பதை நீங்கள் உணர்ந்து  பார்க்க வேண்டும். அரசாணை வருகிறது என்றால் அது நம் மாணவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். இன்று ஆசிரியர் தேர்வுகள் சென்று கொண்டிருக்கும்போதும், நீங்கள் இங்கு வந்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் கருத்துகளை என்னிடம் சொல்லுங்கள். நாம் உட்கார்ந்து பேசுவோம். அதில் எதனை செய்ய முடியுமோ அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுக்காக என்னுடைய வீட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் இருக்கிறேன் என்றால், ஒரு தந்தை ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று தான் அர்த்தம். உங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கும், நிதித்துறை அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்வதையே எனது கடமையாக கருதுகிறேன். இங்கு வருகை தந்தவர்களுக்கு மட்டும் அல்ல, வெளியில் இருப்பவர்களுக்கும் சேர்த்துதான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தியவர் முதலமைச்சர். நாங்கள் எப்படி பெண்களுக்கு எதிரான அரசாணையை வெளியிடுவோம் என நீங்கள் உணர வேண்டும். உங்களின் கருத்து என்னவாக இருந்தாலும் என்னிடம் கொண்டு வாருங்கள். சேர்ந்து பேசி தீர்வு காண்போம். உயர்ந்த துறையை சார்ந்த நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். இந்த மாநாடு உயர்ந்த மாநாடாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Tags :
Advertisement