"வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொகை சார்பில் நான்காண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு என்ன என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து சாதனை மலரை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் வெளியிட்டனர். இதனை ஆட்சியர் அருணா, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார். மூவரும் முதலமைச்சரை சந்தித்தது அரசியல் நோக்கம் இல்லை. நலம் விசாரிப்பதற்காக தான் மூவரும் சந்தித்தனர். தமிழ்நாட்டில் 7 லட்சம் பீகார் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர்களை வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.
தமிழ்நாடு வாக்காளர்கள் மனநிலை வேறு, பீகார் வாக்காளர்களின் மனநிலை வேறு. தேர்தல் ஆணையத்திற்கு உரிய நேரத்தில் எங்கள் கட்சியும் எங்கள் தலைவரும் கொண்டு செல்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை மதவாத கட்சி இல்லை என்று கூறினால் அதுபோல் ஒரு துரோகம் ஒன்றுமே கிடையாது. கூட்டணியில் இருப்பதற்காக பச்சை பொய் கூறுகிறார்.
திமுக அரசு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எங்களுடைய திட்டங்கள். இந்த திட்டத்சுழி ஏதாவது ஒரு பிள்ளையார் சுழி போட்டு இருந்தால் கூட அவர்கள் திட்டங்கள் என்று கூறலாம் நாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் புதிதாக முதலமைச்சரின் மனதில் தோன்றிய திட்டங்கள். இதற்கு எடப்பாடி உரிமை கொண்டாட முடியாத காரணத்தினால் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார். நாங்கள் நிறைவேற்றியுள்ள திட்டங்களில் ஒன்றைக் கூட அவர் செயல்படுத்த
திட்டமிட்டதில்லை.
கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கு முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு, உரிய நேரத்தில் முதல்வர் முடிவு செய்து கூட்டணி குறித்து அறிவிப்பார். ஒரு அரசியல் கட்சித் தலைவர் மற்றொரு அரசியல் கட்சி தலைவரின் உடல்நலம் குறித்தும் அதை நாடகமாடுகிறார் என்பது குறித்தும் பேசுவது என்பது அநாகரிகமானது.
அதை எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டிருக்கிறார் என்றால் தோல்வி அவரது கண்ணுக்கு முன்னால் வந்துவிட்டது என்று பொருள். தோல்வியை பார்க்கின்ற காரணத்தினால் அவர் தன்னை மறந்து என்ன பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ளாமல் பேசுகிறார். இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை.
பிரதமர் மோடியை விட நைனார் நாகேந்திரன் அதிக செல்வாக்கு படைத்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் தான் ஓபிஎஸ்-க்கு பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார். அரசுத் திட்டங்களில் முதலமைச்சர் பெயரோ அரசியல் கட்சித் தலைவர்களின் பெயரோ இடம்பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம கூறியுள்ளது. இரண்டு நாளில் பதில் கூற நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இரண்டு நாட்களில் தமிழக அரசு சார்பில் இதுகுறித்து கருத்து கூறி விளக்கத்தை கூறுவார்கள். யாருடைய அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று போகப் போக தெரியுமே தவிர இன்னைக்கு ஜோசியம் கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார். .