இந்தி மட்டுமே நிர்வாக மொழி என்பதை என்றும் ஏற்க மாட்டோம் - #SuVenkatesanMP!
இந்தி மட்டுமே நிர்வாக மொழி என்பதை என்றும் ஏற்க மாட்டோம் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவை மதுரை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன் தனது X தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
18-வது நாடாளுமன்றத்தின் ஆட்சி மொழிக் குழு கூட்டம் நடைபெற்று அதன் தலைவராக மீண்டும் அமித்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்தியை, அரசின் நிர்வாக மொழியாக ஏற்றுக் கொள்ள கருத்தொற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.
அமித்ஷா அவர்களே, இந்த தேசத்தின் அழகே மொழிப் பன்மைத்துவம் தான். 8-வது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளும் ஒன்றிய அரசின் நிர்வாக மொழிகளாக ஆக வேண்டும். இந்தி மட்டுமே நிர்வாக மொழி என்பதை என்றும் ஏற்க மாட்டோம். 10 ஆண்டுகளாக நீங்கள் இந்தியைத் திணிக்க எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் நாடு மறக்காது. ஒவ்வொரு நாளும் இந்தி திணிப்பைத் தீவிரமாக்கி வந்துள்ளீர்கள். இந்த செயல்முறை எப்படி இந்தியல்லாத மொழிகளுடன் இந்தியை நட்பு மொழி ஆக்கும்?
உள்ளூர் மொழி பேசுபவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறீர்கள். எங்களுக்கு என்றும் தாழ்வு மனப்பான்மை கிடையாது. தாய்த் தமிழின் தொன்மை, வளமை எந்த மொழிக்கும் குறைந்ததல்ல எனும் போது, எங்களுக்கு எப்படி வரும் தாழ்வு மனப்பான்மை? இந்தி ஆதிக்க மனப்பான்மை உங்களுக்குக் கூடாது என்பதே தேசத்தின் தேவை. அதனைத் தமிழ்நாடு என்றென்றும் உறுதியோடு முன்னெடுக்கும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.