"தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள்" - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள். 69 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் நாம் இழந்த நிலப்பரப்பை விட, அதன் பிறகு நாம் இழந்த உரிமைகள் அதிகம். சகோதர மாநிலங்கள் என்று நாம் உறவு கொண்டாடினாலும் கூட அவற்றிடம் நாம் ஆற்று நீர் உரிமைகளை இழந்திருக்கிறோம். தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் துரோகங்களால் கச்சத்தீவு உள்ளிட்ட உரிமைகளை இழந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிப்பதையும், தமிழ் மொழியை படிப்பதையும் கட்டாயமாக்குவதற்கு கூட திறனற்ற அளவுக்கு நமது ஆட்சியாளர்கள் உரிமைகளை தாரை வார்த்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப் பட்டிருக்கும் போதிலும், அந்த உரிமை எங்களுக்கு தேவையில்லை என எட்டி உதைக்கும் ஆட்சியாளர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் திறன் படைத்த தமிழ் அரசை அமைப்பதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.