“மகாராஷ்டிராவின் முதலமைச்சர் யார் என நாளை தெரியவரும்” - ஏக்நாத் ஷிண்டே!
நாளை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் தற்போது வரை முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காரணம் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
பாஜக 132 தொகுதிகளில் அமோக வெற்றிப் பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவி தேவேந்திர பட்னாவிஸ்க்குதான் என உறுதியாக உள்ளது. ஆனால் பீகாரில் குறைந்த இடத்தை கைப்பற்றிய நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது போல ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கப்பட வேண்டும் என சிவசேனா தரப்பு கூறி வருகிறது.
ஆனால் அதிக இடங்களை கைப்பற்றியவருக்குதான் முதலமைச்சர் பதவி எனவும், ஏக்நாத் ஷிண்டேக்கு துணை முதலமைச்சர் பதவிதான் வழங்கப்படும் என பாஜக உறுதியாக உள்ளது. மேலும் துணை முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஏற்க முடியாமல் போனால், அவர் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பையும் பாஜக தந்துள்ளது என மத்திய அமைச்சர ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது;
“மகாராஷ்டிராவின் முதலமைச்சர் நாளை தேர்வு செய்யப்படுவார். பாஜகவின் உயர்மட்ட தலைமைக்கு எனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவேன். பாஜகவின் முடிவிற்கு உடன்படுவேன். பரபரப்பான தேர்தலை தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காக சதாராவில் உள்ள எனது சொந்த கிராமத்திற்கு சென்றேன். முதலமைச்சராக இருந்த 2.5 வருடங்களில் நான் விடுமுறை எடுக்கவில்லை. மகாராஷ்டிராவின் எனது 2.5 ஆண்டுகால ஆட்சி "வரலாற்றில் பொன் எழுத்துக்களால்" பொறிக்கப்படும்” என தெரிவித்தார்.