For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
03:09 PM Nov 21, 2025 IST | Web Editor
மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்”    முதலமைச்சர் மு க  ஸ்டாலின்
Advertisement

சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது . சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து கடந்த டிசம்பரில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. இதனிடையே, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வு பணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியது.

Advertisement

இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான மாநில அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் மக்கள் தொகை 15 லட்சத்து 84 ஆயிரமாகவும் மதுரையில் மக்கள் தொகை 15 லட்சமாகவும் உள்ளது. 2017, மெட்ரோ ரயில் கொள்கையின்படி, 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலேயே மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என்பதால், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு கூட மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று மதுரையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள  எக்ஸ் பதிவில் "எய்ம்ஸும் வராது, மெட்ரோ ரயிலும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...

அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement