“சாதனைக்கான அரசாக 3-ம் முறை ஆட்சியை தொடருவோம்” - கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!
பாஜகவின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், சாதனைக்கான அரசாக மூன்றாம் முறை நாம் ஆட்சியை தொடருவோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் தனித்து கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை பாஜகவுக்கு உள்ளது. இந்நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க, டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜக தனித்து 240 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையையும் (293) பெற்றுள்ளது. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் 99 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி 234 இடங்களையும் கொண்டுள்ளது.
இந்நிலையில், இ ந்த கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர், “வெற்றி தோல்வி என்பது அரசியலின் ஒரு பகுதி. நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் கவனம் செலுத்தலாம். மத்திய அமைச்சரவையில் என்னோடு பணியாற்றியதற்கு அனைவருக்கும் நன்றி. 10 ஆண்டுகளில் தேசத்திற்கு நிறைய செய்துள்ளோம். நமது சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். சாதனைக்கான அரசாக மூன்றாம் முறை நாம் தொடருவோம்”
இவ்வாறு பேசியுள்ளார்.