“தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்கையும் முற்றுக்கையிடவுள்ளோம்” - வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்ததையடுத்து திமுக அரசுக்கு எதிராக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராடவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, “ அமலாக்கத்துறை செய்தி குறிப்பை எல்லோரும் பார்த்தோம். குறிப்பாக டாஸ்மாக் நிறுவனம் அதற்கு சாராயம் கொடுக்கும் ஆலைகள் , பாட்டில் நிறுவனங்கள் இணைந்து கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்-க்கும் மேல் ஊழல் செய்திருக்கிறார்கள். அந்த பணமெல்லாம் அரசியல் லாபத்திற்காக திமுக-விற்கு போயிருப்பதை கேட்டுள்ளோம். கடந்த 10 நாட்களாக திமுக எதற்காக பல பிரச்சனைகளை எடுத்தார்கள், இன்றைக்கு எடுத்த ரூபாய் நோட்டு பிரச்சனை என எல்லாமே இந்த பிரச்சனையில் இருந்து திசை திருப்புவதற்காகத்தான் எடுத்தார்கள்.
டெல்லி, சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலைவிட தமிழ்நாட்டில் நடந்திருக்கும் டாஸ்மாக் ஊழல் மிகப்பெரியது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, நள்ளிரவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூடவே இருந்து சொகுசாக அரசு மருத்துவமையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்றினார்கள். அதன் பின்பு அரசே விடுவிக்க கோரி போராடினார்கள். அதை தாண்டியும் ஓராண்டு கால சிறையிலிருந்து வந்த பிறகு, அமைச்சர் பதவியை அப்படியே பாதுகாத்து செந்தில் பாலாஜிக்கு கொடுத்தார்கள். இதிலிருந்தே சாராயத்துறை திமுக- விற்கு எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும்.
இன்றைக்கு அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு நமக்கு தெரிய வந்திருப்பது என்னவென்றால், தமிழ்நாட்டில் பல இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் போடப்பட்ட வழக்குப்பதிவுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை செய்தார்கள். ஒரு மதுபாட்டிலுக்கு 10 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை அதிகமாக பணம் வாங்கியுள்ளனர். சாராய ஆலையில் இருந்து வரக்கூடிய டெண்டரை ஃபிக்ஸ் பண்ணி எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து சாராய ஆலையிடமிருந்து காண்ட்ராக்ட் கொடுத்துள்ளனர். பாட்டில் கம்பெனிகளுடன் சேர்ந்து போலி ரசீதுகளை போடுகிறார்கள். இதையெல்லாம் மொத்தமாக வைத்து பார்க்கும்போது 1000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை உருவாக்கி அதை வைத்து திமுக அரசியல் செய்கிறது.
ஏழை மக்களின் தாழியை பறித்து அவர்களின் வயிற்றில் அடித்து திமுக ஆட்சி நடந்து வருகிறது. மதுபாட்டிலுக்கு 10, 30 ரூபாய் வாங்கித்தான் இந்த அரசு ஸ்தம்பித்துக் கொண்டிருக்கிறது. இதை நாம் எல்லோரும் தட்டிக் கேட்க வேண்டும். டாஸ்மாக்கில் வரக்கூடிய பணத்தை வைத்துத்தான் திமுக ஆட்சி உள்ளது. 2026 தேர்தலும் டாஸ்மாக்கை நம்பித்தான் இருக்கிறது. மதுவின் கோரப் பிடியில் இருந்து தமிழ்நாட்டை காப்பற்ற வேண்டும். லஞ்சத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
அதனால் வருகிற 17ஆம் தேதி காலை 11 மணிக்கு டாஸ்மாக் அலுவலகத்தில் முற்றுக்கையிடவுள்ளோம் அதற்கு பாஜக சார்பில் பொதுமக்களை அழைக்கிறோம். அதன்பின்பு தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்கையும் முற்றுக்கையிடவுள்ளோம். அரசு பதில் சொல்ல வேண்டும். தவறு செய்தவர்கள் சிறை செல்ல வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும். இதில் முதலமைச்சரும் பதவி விலக வேண்டிய கேஸ் இது”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.