"உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்" - உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!
சென்னை பெருநகர மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக, கடுமையான மழை மற்றும் வெயிலிலும் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கு. பாரதி, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவரது வருகை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்பதால், விஜய் தானே முன்வந்து தனது பனையூர் அலுவலகத்தில் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, "உங்கள் கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கு உங்களுடன் இருப்போம். சட்டம் அல்லது வேறு உதவிகள் தேவைப்பட்டால், எங்கள் கட்சி முழுமையாக உங்களுடன் நிற்கும்" என்று விஜய் உறுதியளித்துள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களின் கடினமான சூழலைக் கண்டு, தான் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஏழு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் முதல் பேச்சுவார்த்தையில் மட்டுமே உள்ளாட்சித் துறை அமைச்சர் கலந்து கொண்டதாகவும் கு. பாரதி தெரிவித்தார். மற்ற பேச்சுவார்த்தைகளில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.சில பத்திரிகைகள், 25% தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதாகத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இது ராம்கி நிறுவனத்திற்காக ஆட்களை எடுத்துக்கொண்டு கூறப்படும் பொய் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மறைமுக வழிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கறிஞர் பி.எஸ். ராமன், ராம்கி நிறுவனத்தின் வழக்கறிஞர் போல் செயல்படுவதாக கு. பாரதி குற்றம் சாட்டினார்."சம்பளக் குறைப்பு, உழைப்புச் சுரண்டல், தனியாருக்கு ஆதரவு அளிப்பது" ஆகியவையே இவர்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்வதாகவும் அவர் சாடினார். உழைப்போர் உரிமை இயக்கம், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருவதாகவும், இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கு. பாரதி உறுதிபடத் தெரிவித்தார்.