For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:21 AM May 21, 2025 IST | Web Editor
ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 ஒரு ஏக்கருக்கு ரூ 5 000 மானியம் வேண்டும்    அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisement

"காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், குறுவை சாகுபடி செய்ய உழவர்களை ஊக்குவிப்பதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத ஆண்டுகளில், நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்களை ஊக்குவிக்கு நோக்குடன் தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, பல்வேறு காரணங்களால் குறுவை பருவத்தில் உழவர்கள் இழப்பை சந்திப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்டுகளும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே குறுவைப் பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

கடந்த ஆண்டில் வேளாண் துறை மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேளாண் துறையும் மைனஸ் 0.09% வளர்ச்சியடைந்துள்ளது. உழவுத் தொழிலின் வளர்ச்சியை மட்டும் பார்த்தால் மைனஸ் 5.93 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சூழலில் நடப்பாண்டிலாவது வேளாண் துறை வளர்ச்சியை நேர்மறையாக மாற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு மாறாக வழக்கமான திட்டங்களையே தாமதப்படுத்தக்கூடாது.

எனவே, இனியும் தாமதிக்காமல், காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்காமல், அனைத்து உழவர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன், குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement