“பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” - ப.சிதம்பரம்
பணவீக்கத்தின் பாதிப்பை அறிய இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லாத சூழலிலும், இந்திய பணவீக்கம் தொடர்ந்து 4 சதவீதம் எனும் குறைந்த நிலையிலேயே நிலையாக நீடித்து வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து எதிர்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
அவர் மாநிலங்களவையில் பேசியதாவது:
விலைவாசி உயர்வு மக்களை அதிகம் பாதிக்கிறது; வட்டி விகிதங்கள் ஏன் இன்னும் அதிகமாக உள்ளன? பட்ஜெட் உரையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஏன் விரிவாகப் பேசவில்லை. பணவீக்க பாதிப்பை அறியாததால்தான் நிதி அமைச்சர் 10 வார்த்தைகளில் பேசிவிட்டு செல்கிறார். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தவில்லை. இதனால் தான், சட்டசபை இடைத்தேர்தல்களில் மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர் இவ்வாறு எம்.பி. ப.சிதம்பரம் பேசியுள்ளார்.