கோரிக்கைகளை நிறைவேற்ற அவகாசம் வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்!
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள கடந்த 8 ஆண்டுகால கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் 9,452 பேருந்துகளில் 8,787 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுக்கிறேன். நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நடைமுறையில் இருக்கிறது.
இது பொங்கல் நேரம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டும். சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. இந்த நேரத்தில் போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது. தொழிலாளர்களுக்கு என்றும் திமுக உறுதுணையாக இருக்கும். போராடுவது உங்கள் உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
முழு செய்தியை காணொளியாக காண: