“விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது” - இபிஎஸ் பதிவு
2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
அங்கு, மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதர் தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டு பல்கலைகழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் ஏற்கனவே மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.