Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்” - தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
04:26 PM Mar 31, 2025 IST | Web Editor
Advertisement

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தி விசைத்தறியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கோவை. திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம். சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள். நெசவாளர்கள், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறி கூலிகள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்
ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சுமார் 2.50 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு, கடந்த பல ஆண்டுகளாகவே உயர்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்றும், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வும் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் விசைத்தறியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண உயர்வு, வாடகை. உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விசைத்தறி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பதினைந்து மாதங்களாக கூலி உயர்வு கோரி, பத்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூகமான முடிவு எட்டாததால் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் விளைவாக கடந்த பதிமூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் ₹30 கோடி என சுமார் ரூ.390 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதிகளில், சுமார் 50,000 விசைத்தறிகள் செயலிழந்து போயுள்ளன. கூலி உயர்வு வழங்கப்படாவிட்டால், மேலும் விசைத்தறிகள் உற்பத்தியை இழந்துவிடும் என்று விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்து, விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவும்படியும். அதன் மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும்படியும் வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPCoimbatorepower loomTiruppur
Advertisement
Next Article