“அதிமுகவுடன் சேர்ந்து...சனாதனத்தை பாதுகாக்க வேண்டும்” - நயினார் நாகேந்திரன் பேச்சு!
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று நயினார் நாகேந்திரனை வரவேற்றனர். இதையடுத்து தொண்டர்கள் முன் அவர் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது, “ கொங்கு மண்டலம் என்றாலே ஒரு இனிப்பான மண். எல்லா சாதி மக்களும் பேசுகின்ற ஒரே வார்த்தை "ஏனுங்க எப்படி இருக்கீங்க" . எனது மகனும் கோவையிலேயே செட்டில் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன்.2026-ல் என்ன எழுதபோகிறான் என எனக்கு தெரியும். கூட்டணியை பற்றியை யாரும் பேச வேண்டாம். பேஸ்புக் டிவிட்டரில் யாரும் அது பற்றி பதிவிட வேண்டாம்.
என் மொபைலை டேப் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். என்னை திமுக அரசாங்கம் கண்காணித்து கொண்டே இருக்கிறது. உள்துறை அமைச்சர் "நானே வருகிறேன். நானே பார்த்துக்கொள்கிறேன்,நீங்கள் பேசாமல் இருங்கள்" என என்னிடம் கூறினார். இரட்டை இலையோடு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களோடு நாம் சட்டமன்றத்திற்கு செல்வோம். அதிமுக தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகளோடு இன்றிலிருந்து சேர்ந்து பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். நமது சனாதனம், வேதமந்திரங்களை பாதுகாக்க வேண்டும்”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.