"வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் அலட்சியத்திற்கு விளக்கம் தர வேண்டும்" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது. காசோலைகள் ஒரே நாளில் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடுகள், தரமற்ற ஸ்கேன் மற்றும் புதிய முறைக்குப் பயிற்சி பெறாத ஊழியர்கள் காரணமாக, பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாகின்றன.
இதன் விளைவாக, ஊழியர்களின் சம்பளம் தாமதமாகி, வியாபாரிகளின் பணபரிவர்த்தனை நின்று போக, தீபாவளி பண்டிகைக்கு முன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
மக்களின் நலனைப் பொருட்படுத்தாமல், வங்கி அதிகாரிகள் சிஸ்டம் அப்டேட் நடக்கிறது, உலகளாவிய பிரச்சினை' போன்ற காரணங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை இழுத்தடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் இந்த அலட்சியத்திற்கு ஆளும் மத்திய பாஜக அரசாங்கமும், ஆர்பிஐ-யும் பொறுப்பு ஏற்று விளக்கம் தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.