"பணி நியமனங்கள் கால தாமதமின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்" - வைகோ!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் 2019 இல் 2331 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஆணைகள் 28.08.2019 மற்றும் 14.10.2019 தேதிகளில் (எண்:12/2019) வெளியிடப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் தகுதி பெற்ற 4000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்தனர். மேலும் இதில் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் ஐந்தரை ஆண்டு காலமாக அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இதனிடையே மீண்டும் 08.11.2022 மற்றும் 14.03.2024 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணையில், உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு 2019 இல் வெளியிட்ட அறிவிப்பாணகளை ரத்து செய்துவிட்டு புதிய அறிவிப்பு வந்தது. (எண்:02/2024, தேதி 14.03.2024). உயர்கல்வித்துறை சார்பில் 06.10.2025 அன்று அரசாணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டு 14.03.2024 தேதி இட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டது.
அதன் பிறகு தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் 2708 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 16.10.2025 அன்று, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு புதிய அறிவிப்பு ஆணை (எண்: 04/2025) வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனமே இல்லாத நிலையில் தற்போது காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் புதிய அறிவிப்பாணையில் இடம்பெற்றுள்ள விதிமுறைகள் விண்ணப்பிக்க காத்திருக்கும் தகுதி உள்ளவர்கள் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. விண்ணப்பதாரர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழுவின் 2018 மற்றும் 2023 அறிவிக்கையின் படி உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வு அல்லது முனைவர் பட்ட தேர்ச்சி இருந்தால் போதுமானது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக எழுத்து தேர்வு நடத்த முன் வந்திருப்பது சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
04.10.2019 மற்றும் 14.03.2024 தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்ப அடிப்படையில் மதிப்பெண் மற்றும் வகுப்பு வாரியாக தரவரிசை தயார் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பின்னர் நேர்முகத் தேர்வு நடத்துவதே சரியாக இருக்கும். எனவே தமிழ்நாடு அரசு உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தற்போதைய அறிவிப்பாணையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு காலம் தாழ்த்தாமல் பணி நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.