“நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு விரும்பாத முடிவை எடுக்க வேண்டிய சூழல் வராதென நம்புகிறோம்!” - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நீதிபதிகளின் பெயா்களில் மத்திய அரசு ‘குறிப்பிட்டு’ தோ்ந்தெடுத்து, நியமனம் மேற்கொள்வது கவலைக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் பணியிடமாற்றம் தொடா்பான கொலீஜியத்தின் பல்வேறு பரிந்துரைகள், மத்திய அரசிடம் தொடா்ந்து நிலுவையில் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘அரசுக்கு விருப்பமில்லாத சில முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டிய சூழல் வராதென நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டது.
நீதிபதிகளின் நியமனம், பணியிடமாற்றம் தொடா்பான உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக கூறி, உச்சநீதிமன்றம் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.
அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள் கூறியதாவது:
கொலீஜியம் குழு பரிந்துரைக்கும் பெயர்களில் மத்திய அரசு ‘குறிப்பிட்டு’ தேர்ந்தெடுத்து, நியமனம் மேற்கொள்கிறது. இது பரிந்துரைக்கப்படுவோரின் பணி மூப்பை பாதிக்கும் என்பதால் கவலைக்குரிய விஷயமாகும். கொலீஜியம் பரிந்துரைகள் மத்திய அரசிடம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பது, திறன்மிக்க வழக்குரைஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதில் பாதகத்தை ஏற்படுத்துகிறது. நீதிபதிகளின் பணியிடமாற்றம் தொடா்பான பரிந்துரைகளுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதே எங்களது கருத்தாகும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு விரும்பாத முடிவை எடுக்க வேண்டிய சூழல் வராதென நம்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசிடம் ஆக்கபூர்வமாக விவாதித்து, நீதிமன்றத்திடம் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி கோரினார். அதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனார்.