‘310 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டோம்’ - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
5 கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக 310 இடங்களை பெற்று விட்டதாக பரப்புரையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றோடு 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து மே.25 ஆம் தேதி நடைபெற உள்ள ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஒடிசாவின் 6 தொகுதிகளும் அடங்கும்.
இந்நிலையில் ஒடிசாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. இன்று ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
5 கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 310 தொகுதிகளுக்கு மேல் பிரதமர் மோடி கைப்பற்றி உள்ளார். எந்த இளைஞரும் தன் குடும்பத்தை விட்டு வேறு எந்த மாநிலத்திற்கும் கூலி வேலைக்குச் செல்லாத வகையில், ஒடிசா மாநிலம் வளர்ச்சி அடைய பாஜக விரும்புகிறது. நாட்டை வளமாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும்.
பழங்குடியின குடும்பத்தின் மகளான திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்கி மோடி கவுரவித்துள்ளார். ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பா.ஜக வெற்றி பெறும் தாமரை மலரும்” என தெரிவித்தார்.