"நாங்கள் கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது" - செல்லூர் ராஜு!
மதுரை காமராஜர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, "பல கட்சியில் வயதானவர்கள் தான் இருப்பார்கள். ஆனால் அதிமுகவில் இளைஞர்கள் மட்டுமே வந்து கொண்டே இருப்பார்கள்.
31 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சாதாரணமானவர்கள், சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் என அனைவருக்கும் வாய்ப்பளித்த இயக்கம் அதிமுக. ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கம் பிரிவது சகஜகமான ஒன்று. ஆனால் பிரிந்த இயக்கம் ஒன்று சேர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக மாறி உள்ளோம்.
அதிமுக சாதனை செய்யாத இயக்கமா? ஒன்றும் செய்யாத இயக்கமா என மக்களிடமே கேட்கிறேன். படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவர் எம்ஜிஆர். 5 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்தாலும் வெற்றி வாகை சூடியவர் எம்ஜிஆர். தாலிக்கு தங்கம் இன்று ஒரு பவுன் ஒரு லட்சம் வரும் என்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு திமுக மூடுவிழா நடத்தி விட்டார்கள்.
திருமாவளவன் நற்பெயரை அவரே கெடுத்துக்கொண்டார். எல்லா விமர்சனங்களையும் கடந்து தான் அதிமுக வளர்ந்து கொண்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வருவார். அப்போது கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும். ஆனால் திமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை கூட கைவிட்டு விட்டார்கள். ஸ்டாலின் வாய் கூசாமல் பேசுகிறார். அதிமுக பேசியதை நான் பட்டியலிட்டு பேசுவேன். பழமையான மதுரையை நவீன மதுரையாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக 10 ஆண்டுகள் என்ன செய்தது என்பதை பெண்களும் மக்களுமே சொல்ல வேண்டும். இன்றைக்கு உலகத்திற்கே போதைப்பொருளை கடத்த வழிவகை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாணவ, மாணவிகள் கூட போதை மயமாக உள்ளனர். மதுரைக்கு 2 அமைச்சர்கள் இருந்தும் என்ன வளர்ச்சி பணிகளை கொண்டு வந்தீர்கள்.
இந்தியாவில் ஊழலால் ஒரு மேயர், மண்டலத்தலைவர்கள், அதிகாரிகள், மேயரின் கணவர் ராஜினாமாவும், கைதும் செய்யப்பட்ட கேவலமான நிலைமை மதுரை மாநகராட்சியில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கவே கொண்டு வரப்பட்ட கட்சி அதிமுக. கேள்வி கேட்பதற்காகவே உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக.
அதிமுக மட்டும் சாதனையை சொல்லி தான் வாக்கு பெறும். மதுரையை சேர்ந்த இரண்டு அமைச்சர்களின் ஈகோவால் தான் இன்னும் புதிய மேயர் நியமிக்கப்படவில்லை. தலைவர் என தன்னை தானே சொல்லி கொண்டு நடித்து கொண்டிருக்கிறார் உதயநிதி.
உதயநிதியை யாரும் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக 2026ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாங்கள் கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது. அதிமுக எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை. எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.