“போலித்தனமில்லாமல் பல மணி நேரம் உரையாடினோம்” - இயக்குநர் ஆர்விஜி உடனான சந்திப்பு குறித்து அமிதாப் நெகிழ்ச்சி!
“உண்மையாக, போலித்தனமில்லாமல் பல மணி நேரம் உரையாடினோம்’ என பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுடனான சந்திப்பை குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஹைதராபாத்தில் இயக்குநர் கோபால் வர்மாவை நேற்று சந்தித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
ஹைதராபாத்தில் எனது படப்பிடிப்பின் கடைசி நாளில் மகா புத்திசாலியான ராமு என்கிற ராம் கோபால் வர்மாவை சந்தித்தேன். அவரது எண்ணங்கள், வெளிப்பாடுகள் எல்லாம் மர்மமாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருக்கின்றன. மூச்சுவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களின் கரு குறித்து மிகவும் தனிப்பட்ட அவரது விருப்பு வெறுப்புகளைம், ஏஐ-ஆல் நாம் எங்கு செல்கிறோம்? ஒரு நாளில் என்னவெல்லாம் மாறுகின்றன என அதன் புதிர் தன்மைகள் குறித்தும் பேசினார்.
இப்போது இருக்கும் நம்பிக்கையின்மை, பயம், சந்தேகம் எதைக்குறித்தும் கவலைப்படாமல் உண்மையாக, போலித்தனமில்லாமல் பல மணி நேரம் உரையாடினோம். விவாதித்தோம். ஒருவரையொருவர் புகழ்ந்துக்கொண்டோம். ஆனால் இதுதான் இறுதியான உண்மை, சரி என நம்பிக்கையில்லாமல் பேசினோம். பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதுபோல எல்லாவற்றை குறித்தும் பேசினோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முக்கியமானப் திரைப்படங்களை இயக்கியுள்ளார். ராம் கோபால் வர்மாவின் சிவா, சத்யா, ரங்கீலா, சர்கார் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது சிறிய அளவிலான படங்களினை இயக்கி வருகிறார். ஆந்திர முதலமைச்சர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையமாக வைத்து 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 2ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.