"தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை" - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"2006ம் ஆண்டு தேமுதிக தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள், அதை வரவேற்கிறோம். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இதுவும் தேமுதிக கொண்டுவர இருந்த திட்டம் தான்.
விவசாயிகளுக்கான திட்டங்களும் விவசாயிகள் வாழ்வாதத்திற்கான திட்டங்களையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படுத்துவதாக இருந்தார் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.
அதேபோல் தமிழ் மொழியை தமிழகம் முழுவதும் கட்டாயமாக்க வேண்டும் அன்னை மொழி காப்போம் அனைத்து மொழிகளையும் கற்போம் என்பது எங்களுடைய நிலைப்பாடு. இதேபோல் தொகுதி மறு சீரமைப்பு தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் தமிழக அரசுடன் இணைந்து போராடுவோம் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காலம் காலமாக ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது வழக்கம். எங்களைப் பொறுத்தவரை உண்மையான விஷயங்களுக்காக போராடுபவர்களுக்கு அரசு ஆதரவு கொடுக்க வேண்டும், கைது செய்யக்கூடாது என்பது எங்களுடைய கருத்து.
தேர்தல் முன்னோட்டமாக 2026ம் ஆண்டு தேர்தல் பட்ஜெட் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. ஒரு வருட காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம் கூட்டணிக்காக தேமுதிக பட்ஜெட்டை வரவேற்கவில்லை,
2006 முதல் தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்ட தேமுதிக திட்டங்கள் தமிழக பட்ஜெட்டில் இருந்ததால் வரவேற்கிறோம். தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம். தமிழக பட்ஜெட்டில் தேமுதிக தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரை கைது செய்யப்படுவார்கள் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அதை விஜய் இடம் தான் கேட்க வேண்டும் எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே செந்தில் பாலாஜி டாஸ்மாக் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்" என தெரிவித்துள்ளார்.