“நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம்!” - ஓபிஎஸ்
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று (05.02.2024) காலை ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது:
அதிமுக கொடியை நான் பயன்படுத்தக் கூடாது என்று தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள்தான் கொடியை பயன்படுத்தியுள்ளார்கள். அதிமுக என்பது எனது ரத்தம். இதனை மாற்றுவதற்கு தீர்ப்பு வழங்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மீண்டும் மோடி தான் பிரதமர் ஆவார். ஏற்கெனவே நாங்கள் பாஜகவின் கூட்டணியில் செயல்பட்டுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதில்லை.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாகதான் இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு கொடுக்கப்பட்டது. மீண்டும் நாங்கள் உரிமை கோருவோம். இரட்டை சிலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.