“அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்” - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!
எடப்பாடி பழனிசாமி பாமக துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
“கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.கே.மூர்த்தியின் ஆட்சிக்காலம் பொற்காலமாக இருந்தது. 25 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி வெறுத்து விட்டோம். எங்கே பார்த்தாலும் திமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருட்கள் தலைவிறித்து ஆடுகிறது. கல்வி கடன், விவசாயி கடன் தள்ளுபடி செய்வதாக தெரிவித்த திமுக ஆட்சி, இதுவரையில் செய்யாமல் துரோகம் செய்து வருகிறது.
2001 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஜெயலலிதாவை அமரவைத்தோம். 2009 ல் மீண்டும் அவரை முதலமைச்சராக அமரவைத்தோம். 2019-ம் ஆண்டு அதிமுகவை வெல்லவைத்து 10 அரசு கோரிக்கைகள், 10% இடஒதுக்கீடு கேட்டும் செவிசாய்க்கவில்லை. இந்த திமுக அரசு 10.5% இடஒதுக்கீடு இதுவரையில் வழங்காமல் அலகழிக்கிறது. இடஒதுக்கீடு வழங்காமல் ஸ்டாலின் சமூகநீதி பற்றி பேசுகிறார்.
தமிழ்நாட்டில் வெள்ளம் வரும். 10 நாட்கள் கழித்து ரூ.6000 வழங்கப்படும். அடுத்த நாள் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க்கில் ரூ.56 ஆயிரம் கோடி வருமானம் வரவேண்டும் என டார்கெட் நிர்ணயிக்கப்படும். காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.