For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
12:20 PM Feb 25, 2025 IST | Web Editor
“இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம்”   முதலமைச்சர் மு க  ஸ்டாலின் கடிதம்
Advertisement

இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை போராட்டம் தொடரும்!

உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த இயக்கத்தின் வழிவந்தவர்கள் நாம்! தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு பேரறிஞர்  அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையைத் தமிழ்நாடு கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே பாஜக தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாஜக நிர்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் இந்தி, சமஸ்கிருருதச் சேவகர்களாக இருக்கிறார்கள். இந்த மண்ணில் இடக்கினைச் செய்ய நினைக்கும் எதிரியாக ஆரியமோ, ஆதிக்க இந்தியோ சமஸ்கிருதமோ எதுவாக இருந்தாலும், எத்தனை கோடியை மத்திய அரசு கொட்டிக் கொடுத்தாலும் அவற்றை ஏற்க மாட்டோம்.  ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு!’ என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்கு உண்டு.

உங்களில் ஒருவனான நான் முதன்முதலில் கட்சி மாநாட்டில் உரையாற்றியது இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துதான். 1971-ஆம் ஆண்டு கோவையில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில்,  ‘தமிழுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக உள்ள மாணவர்களின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றுதான் முழங்கினேன்.

ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக தொண்டர்களின் இரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை,  ‘மத்திய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்’ என்று 10 ஆயிரம் ரூபாயைக் காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு.

இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்று எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்துகொள்வதற்கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன். தமிழ் காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக நான் என்றும் முன் நிற்பேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement