"ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை" - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிக்கு உட்பட்ட ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வடக்கு மண்டல திரளணி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் சாரண சாரணிய இயக்கத்தின் மாநில தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து சாரண சாரணியர் மாணவர்களின் பல்வேறு திறமைகளை விளக்கும் வகையில் ஆபத்து காலத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், பொதுமக்களை எவ்வாறு காப்பது என்பது குறித்தும் செயல் முறையில் சாரண சாரணியர் மாணவர்கள் செய்து காட்டினர். அப்போது கயிறு ஏறுதல், ஊடுருவி செல்லுதல், கயிறு பாலத்தில் நடத்தல், உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து காட்டி பாராட்டு பெற்றனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பள்ளியில் ப வடிவில் வகுப்பறை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், "ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை, ப வடிவத்தில் நடத்திப் பாருங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறோம்.
ஏற்கனவே தொடக்க கல்வியில் பிரைமரி ஸ்கூல் பொறுத்த வரைக்கும் அதுபோல் தான் உக்கார வைக்கிறோம். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போக்கஸ்டாக இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்டது தான். ப வடிவம் வகுப்பறை கட்டாயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.