"சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.. ஒவ்வொரு தவறையும் விமர்சிக்க தயங்கமாட்டோம்" - ஜெகன்மோகன் ரெட்டி
இந்த அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அரசு செயல்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு தவறுகளையும் உடனுக்கு உடன் எதிர்ப்போம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து, கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபள்ளி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான அரங்கில் கடந்த 12ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மத்திய அமைச்சர்கள், நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், விஜயவாடாவில் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது, "எனது ஆட்சி காலத்தில் சொன்னதை சொன்னபடி நிறைவேற்றி இரண்டு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணமாகவே நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஆனால் மக்கள் தற்போது இரண்டு பட்டன்களை அழுத்தி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு
ஓட்டு போட மறுத்துவிட்டனர். அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க ஹனிமூன் பீரியடு என்று கூறப்படும் ஆறு மாத காலம் பொறுத்து இருக்க மாட்டோம். இந்த அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அரசு செயல்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு தவறுகளையும் உடனுக்கு உடன் எதிர்ப்போம்.
வாக்குப்பதிவின் அடிப்படையில் 40 சதவீத வாக்காளர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதனை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே எங்கள் கட்சி தொண்டர்களை ஆளும் கட்சி தொண்டர்கள் தாக்குவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.