“திமுக கூட்டணியில் தான் உள்ளோம்.. எந்த பிரச்னையும் இல்லை” - #VCK தலைவர் திருமாவளவன் எம்பி பேட்டி!
இப்போதும் திமுக கூட்டணியில் தான் உள்ளதாகவும், இந்த கூட்டணி தொடர்வதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“மதுரையில் விசிக கொடி கம்பம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி அளிக்கவில்லை. விசிக கட்சிக்கு எதிரான நிலைப்பாடுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மீண்டும் கொடி கம்பம் அமைக்க அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்த பின்னர் கொடி கம்பத்தை மீண்டும் வைப்போம்.
பாஜக, பாமக உள்ள கூட்டணியில் சேர்ந்தால் நாங்கள் corrupt ஆகி விடுவோம். அந்தளவுக்கு கசப்பான அனுபவத்தை பாமக கொடுத்துள்ளது. மதுவால் கண்ணீர் விட்டு கதறும் தாய்மார்களுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
அரசியல் கணக்கோடு இந்த மாநாட்டை நடத்தினால் இதை விட அசிங்கம் எனக்கு வேறில்லை. இதில் ஒரு சதவிகிதம் கூட தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை. தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து மது ஒழிப்பு குறித்து பேசி வருகிறோம். கடைசி மனிதனுக்கும் சனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என 1999ல் பேசினேன். அதை நினைவுபடுத்தி நேற்று (செப். 13) செங்கல்பட்டில் நான் பேசியதை என் அட்மின் எடுத்து பதிவு செய்துள்ளார். ஏன் அதை நீக்கினார்கள் என தெரியவில்லை. அதுகுறித்து இன்னும் என்னுடைய அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை.
அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது தான் எப்போதும் எங்கள் கோரிக்கை. ஜனநாயக பரவலாக்கத்தை எப்போதும் பேசலாம். எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன்.
இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போடக்கூடாது. காவிரி நீர், ஈழ தமிழர் விவகாரங்களில் அனைவரும் இணைவது போல் மது ஒழிப்பிலும் இணையலாம்.
பாமக உடன் எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அவர்களை அழைக்கவில்லை. இப்போதும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். கூட்டணியில் தான் தொடர்கிறோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை”
இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்பி கூறினார்.