“ஈரானுக்கு உரிய பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறோம்” - #Isreal ராணுவம் பதிவு!
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினருக்கும் - இஸ்ரேலுக்கும் மோதல் தொடங்கி நாளையுடன் ஓராண்டுகிறது. தற்போதுவரை போர் நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும் இந்த மோதலானது மூன்றாம் உலகப்போருக்கும் வழிவகுத்து வருகிறது. காரணம் இஸ்ரேலின் தென்மேற்கில் காசா முனை அமைந்துள்ளது. வடக்குப் பகுதி எல்லையில் லெபனான் அமைந்துள்ளது. காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் எல்லை அருகே தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான மோதல்போக்கு அதிகரித்து வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் ஈரான் இஸ்ரேல்மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து லெபனான், ஈரான், இஸ்ரேல் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தங்கள் நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி(அக்.7), ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ உயரதிகாரி தெரிவித்ததாவது;
“இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, பல்வேறு முனைகளிலும் எங்களது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையிலும் சட்டத்துக்கு விரோதமாகவும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமாகி வருகிறோம்” என தெரிவித்தார்.