“வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” - முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!
வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று (ஜூலை 30) அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை மாலை 5 மணி நிலவரப்படி, 107-ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலச்சரிவில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது,
“வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு. இந்த பேரழிவு மிகவும் வருத்தமளிக்கிறது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவானது, இதயத்தை உலுக்கும் பேரழிவாகும். வயநாடு, கோழிக்கோட்டில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டப் பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 107 உடல்களை மீட்டுள்ளோம். ஆனால் எண்ணிக்கை மாறலாம்.
128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாட்டில் 321 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவக்குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மண்ணில் புதைந்தும் எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப் படை இணைந்து பணியாற்றி வருகின்றன.
வயநாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. வயநாட்டில் உள்ள 45 உள்பட மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 60 பேர் கொண்ட NDRF குழு வயநாடு சென்றடைந்தது, பெங்களூரில் இருந்து 89 பேர் கொண்ட குழு சென்று கொண்டிருக்கிறது. பேரிடர் குறித்து அறிந்ததும், பிரதமர் மற்றும் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களின் உதவியை வழங்க முன்வந்துள்ளனர். இந்த நெருக்கடியை சமாளிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர்” இவ்வாறூ தெரிவித்துள்ளார்.