#WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
ராணுவப் படையினரும் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100- க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 126 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 1000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : மொபைல் மற்றும் கணினி பார்ப்பதால் கண்களுக்கு எந்த பிரச்னையும் வராதா? - #TNOA தலைவர் கூறுவது என்ன!
இந்த மீட்புப் பணிகளில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, ஸ்வீடன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 6 விஞ்ஞானிகள் உட்பட 24 விஞ்ஞானிகளைக் கொண்ட உலக வானிலை மாற்றங்களை ஆய்வு செய்யும் குழு வயநாடு நிலச்சரிவு குறித்து ஆய்வு நடத்தியது.
இந்நிலையில், ஆந்திரா முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கேரள அரசுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.