#WayanadByElection | போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் வெளியானது - எத்தனை பேர் தெரியுமா?
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தி வயநாட்டில் இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து வயநாடு வருகை தந்தார். வயநாடு வந்த பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அவர் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக விமர்சனம் செய்தார்.
வயநாடு தொகுதியில் மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் பின்னர் கடந்த 28ம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அன்றைய தினம் வரை யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை.
இந்த நிலையில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதன்படி பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.