“வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள்" - கேரள அரசு அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவால் வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் தனி நகரியம் உருவாக்கப்பட்டு அங்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போதுவரை 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:
"நிலச்சரிவின் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாதுகாப்பான புதிய நகரியம் அமைப்பதற்கான இடத்தைக் கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வீடுகளை இழந்தோருக்கு அங்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன.
கேரள அரசு மட்டுமின்றி உலக அளவில் பல தரப்பினரும் புதிய வீடுகளைக் கட்டும் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளனர். இதற்காக கூடுதல் நில வருவாய் ஆணையர் ஏ.கீதா தலைமையில் ‘வயநாட்டுக்கான உதவி’ என்ற தனிப் பிரிவு அமைக்கப்பட்டு இதுதொடர்பான அனைத்து முன்னெடுப்புகளும் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இதையும் படியுங்கள் : புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - ரயில்வே அமைச்சர் கூறிய பதில் என்ன?
அந்த வகையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகளைக் கட்டித் தரப்படும் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதேபோல் கா்நாடக முதலமைச்சர் சித்தராமையா 100 வீடுகளைக் கட்டித்தர உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, சோபா ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த வணிகர் சங்கம் சார்பில் தலா 50 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தொடா்ந்து கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக மாநில கல்வி அமைச்சா் வயநாட்டுக்கு நேரில் சென்று களப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்"
இவ்வாறு தெரிவித்துள்ளார்.